சீமானை கிண்டல் செய்த யூடியூபர்! மைக்செட் ஸ்ரீராமை வறுத்தெடுக்கும் தம்பிகள்.. இணையத்தில் சர்ச்சை!

பிரபல யூடியூப் சேனலான ‘மைக்செட்’ (Micset) மூலம் நகைச்சுவை வீடியோக்களைப் பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் ஸ்ரீராம். ‘முரட்டு சிங்கிள்’ தொடர் மூலமாகப் பெருமளவில் கவனம் பெற்ற இவர், முன்னதாக சினிமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனிடம் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பி, நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மைக்செட் யூடியூப் சேனலில் ‘அரசியல் சோதனைகள்’ என்ற தலைப்பில் புதிய நகைச்சுவை வீடியோ ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் சுட்டிக்காட்டாமல் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அந்த வீடியோவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உடல் மொழி, பேச்சு நடை மற்றும் சிரிப்பு ஆகியவற்றை ஸ்ரீராம் இமிடேட் செய்து ஓவர் பெர்பார்மன்ஸ் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீமானை கிண்டல் செய்யும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ‘தம்பிகள்’ சமூக வலைத்தளங்களில் மைக்செட் ஸ்ரீராமுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களையும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கைகளால் விருது பெற்ற ஸ்ரீராம், மேடையிலேயே “சீமான் அண்ணன் பலருக்கு இன்ஸ்பிரேஷன்” எனப் புகழ்ந்து பேசிய பழைய வீடியோக்களையும் பகிர்ந்து, “நீங்களே இப்படி வீடியோ பண்ணலாமா?” என ஆதங்க வெளிப்பாடுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "வாக்கு வங்கி தான் முக்கியம்!" - 2026 தேர்தலில் ஜாதி அரசியலை கையில் எடுக்கும் கட்சிகள்; வேட்பாளர் பட்டியலில் வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்!

அதேவேளையில், நாம் தமிழர் கட்சியினர் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், ஒரு யூடியூபரின் நகைச்சுவை வீடியோவைக்கூடக் கடந்து போக முடியாமல் கொதித்தெழுவது ஏன் என இணையவாசிகளில் மற்றொரு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.