கட்சியினர் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சிச் செயல்பாடுகள், நிர்வாக ஒழுங்குமுறை மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கட்சித் தொண்டர்கள், களப் பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் பொதுவாழ்வில் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “எந்தவொரு சூழலிலும் அல்லது காரணத்தைக் கொண்டும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அல்லது தொண்டர்கள் தவறான நடவடிக்கைகளிலோ அல்லது ஊழல் சார்ந்த விவகாரங்களிலோ ஈடுபடக் கூடாது என்பதில் கட்சியின் தலைமை மிகவும் உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்துத் விரிவாகப் பேசிய அவர், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாராவது தவறு செய்தால் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானால், அவர்கள் மீது எந்தவிதப்பட்சபாதமும் இன்றி உடனடியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்பவர்கள் கட்சியின் எந்த உயர்மட்டப் பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கட்சியின் தலைவர் விஜய் உடனடியாகப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியிலிருந்தும் நீக்குவார்” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வெளிப்படையான நிர்வாகத்தையும், தூய்மையான அரசியல் பாதையையும் முதன்மை இலக்காகக் கொண்டு இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆட்சிப் பொறுப்பிலும் நிர்வாக அமைப்பிலும் உள்ள அனைத்துப் பிரிவினரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், இந்த வழிகாட்டுதல்களை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து மட்ட அமைப்புகளும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  TVK Joining INDIA Alliance in Delhi? "ஜனநாயகத்தின் ஆன்மாவை காக்க ஒன்றிணைவோம்!" பிறந்தநாள் வாழ்த்துக்கு ராகுல் காந்தி கொடுத்த ட்விஸ்ட்! முதல்வர் விஜய், ஸ்டாலினுக்கு தனித்தனியே ஓபன் சிக்னல்!

அரசியல் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே தவெகவின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் அமைப்பின் ஒவ்வொரு நகர்வும் இருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.