“Tie Them Up If Someone Demands Money Using Our Names!” தவெக பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு! “போட்டோ எடுத்துட்டு ஏமாத்துறாங்க!” போலி ஆசாமிகளுக்கு அமைச்சர் ஆனந்த் பகிரங்க எச்சரிக்கை! மாற்றுக்கட்சியினர் இணையும் பின்னணி!

தமிழக முதலமைச்சர் சா. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தூய்மையான நிர்வாகம் மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பி.சி. ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியான விளக்கங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். மாற்றுக்கட்சிகளில் இருந்து தவெக-வில் இணையும் புதிய நிர்வாகிகளின் சேர்க்கை விழாவிற்குப் பிறகு அவர் இந்த முக்கிய உரையை ஆற்றினார்.

அமைச்சர் ஆனந்த் பேசுகையில், “நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தற்பொழுது மக்களுக்கு முற்றிலும் ஊழல் இல்லாத ஒரு தூய்மையான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார். இந்த நேர்மையான நிர்வாகம் இன்னும் அடுத்த 20 வருடங்களுக்குத் தொடர்ந்து தமிழகத்தில் தங்கு தடையின்றி நடைபெறும் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில், ஆளுங்கட்சி என்ற பெயரைக் பயன்படுத்தி சிலர் முறைகேடுகளில் ஈடுபட முயல்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. தவெக அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘நான் டிரான்ஸ்பர் வாங்கித் தருகிறேன்’ அல்லது ‘டெண்டர் எடுத்துத் தருகிறேன்’ என்று யாராவது உங்களிடம் கூறினால், அவர்களை உடனே கட்டிப் போட்டு வையுங்கள்; உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுங்கள், அவர்கள் வந்து பிடித்துக் கொள்வார்கள்” என்று அதிரடி எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  EV Velu Slams TVK Gov: "திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!" எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!

மேலும், பொதுவெளியில் தங்களைச் சந்திக்கும் நூற்றுக்கணக்கான மக்களுடன் புகைப்படம் எடுப்பது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், “எங்களிடம் 99 நல்லவர்கள் புகைப்படம் எடுக்கும் பொழுது, யாராவது ஒரு இடக்குமுடக்கான ஆள் வந்து புகைப்படம் எடுத்துவிட்டு, அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நாங்களோ எங்களுடைய வேலை உண்டு, கடமை உண்டு என்று செவனே என இருக்கிறோம். ஆனால், யாரோ செய்யும் தவறுக்கு, ஒரு குறிப்பிட்ட தினசரி நாளிதழ் திட்டமிட்டு, ‘தவெக உறுப்பினர்’, ‘தவெக-வில் இருந்தவர்’ என்று துண்டுப் பிரசுரங்களை டிசைன் செய்து செய்தி வெளியிடுகிறது. மக்கள் ஏற்கனவே தகுந்த தீர்ப்பைக் கொடுத்து, நமது தலைவரை முதலமைச்சராக்கி விட்டார்கள். நிர்வாகத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் எங்களிடம் நேரடியாகச் சொல்லுங்கள், அதை மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கண்டிப்பாகத் திருத்திக் கொள்வோம்” என்றார்.

தொடர்ந்து மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் சேர்க்கைகள் குறித்துப் பேசிய அவர், “எந்தவொரு சுயநல எதிர்பார்ப்பும் இல்லாமல், தூய்மையான ஆட்சியை ஆதரித்து வரும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் நீண்டகால அரசியல் அனுபவங்களையும், துறை சார்ந்த திறமைகளையும் இந்த அரசு நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும். திறமை உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத்தில் கண்டிப்பாக உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.