Sivaji Ganesan Centenary: “சிவாஜி நூற்றாண்டு விழா எங்கள் கடமை” – முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாகப் பிரபு பேட்டி!

தமிழ் திரையுலகின் வரலாற்றுச் சகாப்தமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா, முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு விழாவாக மிகக் கோலாகலமாக நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளனர். 2028-ஆம் ஆண்டு வரவிருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்கப் பெருவிழாவைத் தமிழக அரசே முன்னின்று நடத்தும் என்ற அறிவிப்பு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடத்துவது தவெக அரசின் தலையாய கடமையாகும். இது எங்களுக்குப் பெருமை என்பதைத் தாண்டி, தமிழ் மண்ணின் கலைச் பொக்கிஷத்திற்கு நாங்கள் செலுத்தும் நன்றிக்கடன்” என்று குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் இந்த விழாவைத் தானே தலைமை ஏற்று நடத்துவார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, இந்த அறிவிப்பு குறித்துத் தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். “வருகின்ற 2028-ஆம் ஆண்டு எனது தந்தை சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா வருகிறது. அவ்விழாவைத் தாம் முன் நின்று நடத்தப்போவதாக முதலமைச்சர் விஜய் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார். அந்தப் பொன்னான நாளுக்காக எனது குடும்பத்தினரும், லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  No Security Or Collateral Required: ரூ.20 லட்சம் வரை முத்ரா கடன்! ஜாமீன் இல்லாமலே அள்ளலாம்! புதிய விதிகள் இதோ!

தமிழ் சினிமாவின் நடிப்பு இலக்கணமாகத் திகழ்ந்த சிவாஜி கணேசனின் கலைப்பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், இந்த நூற்றாண்டு விழாவில் சர்வதேச அளவிலான திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டு வருகின்றன.