“அரசியல் பேசத் தடை! நலம் விசாரிக்க மட்டுமே அனுமதி!”: தைலாபுரத்தில் வைரலாகும் ராமதாஸின் அதிரடி பேனர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனரும், மூத்த தலைவருமான மருத்துவர் அய்யா ராமதாஸ், தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தீவிர அறிவுரை வழங்கினர். இதன் காரணமாக, தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பணிச்சுமையைத் தவிர்க்கும் பொருட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் அரசியல் துறவறம் பூண்டார்.

அரசியலில் இருந்து விலகினாலும் பொதுமக்களுடனான தொடர்பைத் தொடர விரும்பிய ராமதாஸ், திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அவரது இல்லத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள ‘அரசியல் துறவறம்’ என்ற அறிவிப்பு பலகை சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த பேனரில், “மருத்துவர் அய்யா அவர்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் நலம் விசாரிக்கவும், மரியாதை நிமித்தமாகவும் மட்டுமே சந்திக்க வேண்டும். கூட்டணி, தேர்தல் அல்லது கட்சியின் உள்விவகாரங்கள் உள்ளிட்ட அரசியல் குறித்து யாரும் விவாதிக்கவோ, பேசவோ கூடாது” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "சென்னையை நாசமாக்கியது அமைச்சர் சேகர் பாபு தான்!" மேயர் அதிகாரத்தை முடக்கிய அராஜகம்! பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி தாக்கு!

இதனிடையே, பாமகவின் அனைத்து நிர்வாகப் பணிகள், அரசியல் முடிவுகள் மற்றும் தேர்தல் வியூகங்களை முழுமையாகத் தலைவர் அன்புமணி ராமதாஸே கவனித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனி அணிகளாகச் செயல்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இருப்பினும், தந்தை-மகன் இணைந்தது ராமதாஸ் தரப்பில் இருந்த சில ஆதரவாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக, ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ அருள் தனிப்பாதை வகுக்கவோ அல்லது தனிக்கட்சி தொடங்கவோ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின.

தற்போது நிலவும் இந்த உட்கட்சிச் சவால்களுக்கு மத்தியில், பாமகவை ஒருங்கிணைத்து உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் தீவிர வியூகங்களை வகுத்து வருகிறார்.