விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் சுங்கச்சாவடி பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் (தவெக) இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எச்.ராஜாவின் காருக்கு முன்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டப்பட்ட கார் ஒன்று சென்றுள்ளது. அந்த காரில் அரசு வாகனம் என்பதைக் குறிக்கும் “G” (Government) என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கவனித்த எச்.ராஜா, அந்த காரில் பயணித்த அரசு வழக்கறிஞர் சசிகுமாரைக் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் மற்றும் அவருடன் இருந்த தவெகவினர், எச்.ராஜாவின் காரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்து கார் முன்பாக நின்று காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சுவாரஸ்யமான அரசியல் தகவல்களும் வெளியாகியுள்ளன. தவெக கொடி கட்டிய காரில் சென்ற அரசு வழக்கறிஞர் சசிகுமார், முன்பு பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும், அந்தப் பொறுப்பை எச்.ராஜாதான் அவருக்கு வாங்கிக் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.கவிலிருந்து விலகித் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
தான் பார்த்துப் பார்த்துப் பதவி வாங்கிக் கொடுத்த நபர், தற்போது தவெக கொடியுடன் அரசு முத்திரை காரில் வலம் வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தே எச்.ராஜா திட்ட முயன்றதாகவும், பதிலுக்குத் தவெகவினர் சுங்கச்சாவடியை மறித்து ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் திண்டிவனம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் நிலவியது.





