“நீங்க மஞ்ச பத்திரிகையா?” செய்தியாளரை ஒருமையில் பேசி ஆவேசமடைந்த வைகோ: திருப்போரூரில் பரபரப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசிய விவகாரம் தற்பொழுது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது, செய்தியாளரின் கேள்விக்கு முறையாகப் பதிலளிக்காமல் ஆவேசமடைந்த வைகோ, அவரை நோக்கி “நீங்க எந்த பத்திரிக்கை?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கூறித் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்திய வைகோ, “நீங்க மஞ்ச பத்திரிகையா? திட்டமிட்டு இங்க வந்திருக்கீங்க” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வைகோவின் இந்த ஆவேசமான பேச்சினைத் தொடர்ந்து, அங்கிருந்த மாதிமுக நிர்வாகிகள் சிலர் கேள்வி கேட்ட செய்தியாளர்களைத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியிலேயே அதிரடியாக நிறுத்தப்பட்டது. ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசியதும், மாதிமுக நிர்வாகிகள் வன்முறையில் ஈடுபட முயன்றதும் தற்பொழுது ஊடக வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை மதிக்காமல் வைகோ நடந்து கொண்ட விதம் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் முயற்சிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு ஊடக அமைப்புகளும், அரசியல் தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், அவர்களை ஒருமையில் பேசி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது ஆரோக்கியமான அரசியல் நாகரிகம் அல்ல என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.