சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் மிகப்பெரிய கொந்தளிப்பையும் புயலையும் கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகப் போராட்டத்தில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி மேடையில் பேசத் தொடங்கினார். அப்போது தான் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டதுடன், மேடையை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துபவர்களே கோமாளிகள் என்று பேசினார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிலர், மேடையில் சனம் ஷெட்டியுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரிடமிருந்த மைக்கைப் பலவந்தமாகப் பிடுங்கி அவரை வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசிய சனம் ஷெட்டி, “இங்கு நடப்பது உண்மையான போராட்டமே கிடையாது, இது முழுக்க முழுக்க போலியான போராட்டம். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் தேர்வு பற்றி அக்கறையாகப் பேசவே இல்லை. எல்லாரும் தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் எதிராகத் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த அரசியல் அஜண்டாவுக்காக மாணவர்கள் மேடையைப் பயன்படுத்துகிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட மேடையில் ஒரு பெண் நடிகையின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு மைக் பிடுங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. தவெக அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி இதுவா என்ற கோணத்திலும், சனம் ஷெட்டியின் அதிரடிப் பேச்சு குறித்தும் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் மோதி வருகின்றன.





