தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம், மேலசெருவு மண்டலத்திற்குட்பட்ட எர்கட்ட தண்டா பகுதியில் நில எல்லைக் கோட்டில் நின்றிருந்த ஒற்றை வேப்ப மரத்திற்காக 25 ஆண்டுகளாக நீடித்து வந்த குடும்பப் பகை, இறுதியில் இருவர் கொடூரமாகக் வெட்டிக் கொல்லப்பட்ட ரத்தக் களறியில் முடிவடைந்துள்ளது.
இப்பகுதியில் வசித்து வந்த வெங்கடேஸ்வரலு மற்றும் பூக்யா சைதா ஆகியோரின் குடும்பத்தினருக்கு இடையே வீட்டின் எல்லையில் இருந்த மரம் தொடர்பாகக் கடந்த கால் நூற்றாண்டாகத் தொடர்ச்சியாகத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் வெங்கடேஸ்வரலு சிலரை அழைத்து வந்து அந்த மரத்தை வெட்ட முயன்றுள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பூக்யா சைதாவின் மகன் ராமு என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல ஆண்டுகளாக நீடிக்கும் மரத்தை எப்படி வெட்டலாம் எனக் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி எல்லை மீறிய நிலையில், ராமு தான் மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்து வெங்கடேஸ்வரலுவை சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராமுவின் தந்தை பூக்யா சைதா, மகனைத் தடுத்து நிறுத்த ஓடி வந்துள்ளார். ஆனால், பக்கத்து வீட்டுக்காரரைக் கொன்ற வழக்கைப் பரஸ்பர மோதலாகச் சித்தரித்துத் தப்பிப்பதற்காக, கொடூர மனநிலையோடு ராமு தன் சொந்தத் தந்தையையும் அதே கோடரியால் வெட்டிக் கொடூரமாகச் சாய்த்துள்ளார்.
இந்த இரட்டைக் கொலையைக் கண்டு கொதித்தெழுந்த கிராம மக்கள், கொலையாளி ராமுவின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் கலவரச் சூழல் உருவானது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, கல்வீச்சில் சப்-இன்ஸ்பெக்டரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஹுஜூர்நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற காவல்துறையினர், இரட்டைக் கொலை வழக்கில் கொலையாளி ராமுவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





