சென்னை மெரினா கடற்கரை அருகே மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம கும்பலால் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி முடிந்து உணவு உண்பதற்காக வெளியே சென்ற போதே இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் வழக்கம்போல மெரினா அருகே உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அங்கு கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அந்த மாணவரைச் சூழ்ந்து தாக்கத் தொடங்கியது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியபோதும், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் அந்த மாணவனின் தலை மற்றும் கால்களில் மிக பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வரவும், அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனடியாக மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் பழைய பகை அல்லது கல்லூரி மாணவர்களுக்கு இடையே நிலவும் ‘ரூட்’ பிரச்சினை காரணமாக நடந்ததா? அல்லது சமூக விரோத கும்பலின் வேலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய 5 பேரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.





