விருதாச்சலம் தொகுதியில் தொடர்ச்சியாக 3 நாட்களாகக் களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய அரசின் மந்தமான செயல்பாடுகள் மற்றும் தொடரும் லாக்கப் மரணங்கள் குறித்து முதலமைச்சருக்குக் காரசாரமான சவால்களை விடுத்துள்ளார்.
தேமுதிக சார்பில் விருதாச்சலம் தொகுதி முழுவதும் நேரடியாகச் சென்று மக்கள் குறை கேட்கும் முகாம்களை நடத்தி வரும் பிரேமலதா, தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்று வருகிறார். குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் மற்றும் பட்டா கோரி லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் தவிப்பதாகக் கூறிய அவர், “மக்களுக்குக் கண்ணீருக்குப் பதில் ரத்தம் தான் வருகிறது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “புதிய அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், தொகுதி மேம்பாட்டிற்காக இன்னும் எந்தவொரு டெண்டரும் விடப்படவில்லை, அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் அரசாணை வரவில்லை என்றே கூறுகிறார்கள். வெறும் அறிவிப்பு அரசியலாக இல்லாமல், உடனடியாகச் செயல்பாட்டில் இறங்குங்கள்,” என்று முதலமைச்சருக்கு நேரடியாகச் சவால் விடுத்தார்.
மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மழையில் நெல் மூட்டைகள் பாழாவதையும், லஞ்சம் வாங்குவதையும் சுட்டிக்காட்டி சாடினார். அத்துடன் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு அறிவித்தும், விருதாச்சலம் தொகுதியில் பெரும்பாலான கடைகள் இன்னும் திறந்தே இருப்பதாகக் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் லாக்டவுன் நேரத்தில் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசியதை விவரித்தார். “மனிதர்களை அடித்துக் கொல்வதற்குக் காவலத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? லாக்-அப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆகஸ்ட் 5-இல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதையெல்லாம் நான் சட்டசபையில் காரசாரமாகப் பேசுவேன்,” என்று எக்காளமிட்டார்.





