செஞ்சிப் பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போய் 23 நாட்கள் கடந்தும் எந்தத் துப்பும் துலங்காதது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதற்குச் சான்று என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடித்துத் தருவதே அரசுக்கு உண்மையான தீபாவளி பரிசாக இருக்க முடியும் என்றும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
23 நாளாகியும் குழந்தையைத் தேடும் திணறல்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கடந்த முறை நான் இங்கு வந்தபோது இதே பிரச்சினையைப் பற்றிப் பேசினேன். ஆனால், இன்று 10-15 நாட்களுக்குப் பிறகும் அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா, இறந்துவிட்டதா என்பது குறித்த எந்தத் துளியும் எவிடென்சும் கிடைக்கவில்லை. ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையாகப் பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, ஒரு குழந்தையைக் கண்டுபிடிக்க இவ்வளவு திணறுவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றார். திரைப்படங்களில் கிட்னி திருடுவதற்காகக் குழந்தைகளைக் கடத்தும் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம், ஆனால் அது இன்று நிஜமாகியிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
நெல் கொள்முதல் விவகாரமும் அமைச்சரின் பதிலும்
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் அவல நிலை குறித்தும் பேசினார். “பல இடங்களில் நெல் மூட்டைகளிலேயே முளைத்துவிட்டதாக அமைச்சர்கள் மறுக்கிறார்கள். ஆனால் களத்தில் இறங்கி ஆய்வு செய்தால் உண்மை தெரியும். அமைச்சர் சப்பக்கட்டு கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. பல கிராமங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், இன்னும் சில கிராமங்களில் முளைத்த நெல் மூட்டைகள் அப்படியே உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நியாயம் வழங்க வேண்டும்” என்றார்.
எம்எல்ஏ நிதி மற்றும் வளர்ச்சிப் பணிகள்
தொகுதி மேம்பாடு குறித்துப் பேசுகையில், “என்எல்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளேன். தற்போதைய நிலையில் இன்னும் எம்எல்ஏ நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி கைக்கு வந்ததுமே உடனடியாக மக்களுக்கான பணிகளைச் செய்யத் தயராக இருக்கிறேன். டாஸ்மாக் கடைகளை நகருக்கு வெளியே கொண்டு செல்வது மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீர் வசதிகளை நிறைவேற்றத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக” அவர் மேலும் தெரிவித்தார்.