தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இன்று (ஏப்ரல் 16, 2026) நாமக்கலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்தச் சட்ட நகலை முதலமைச்சர் ஸ்டாலின் தீயிட்டு எரித்தார். இச்சட்டத்தை ஒரு ‘சதித் திட்டம்’ மற்றும் ‘கருப்புச் சட்டம்’ என்று வர்ணித்த அவர், மாநிலத்தின் உரிமைகளைக் காக்க மக்கள் வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றிப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
நாமக்கல் உழவர் சந்தை பகுதியில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியே இந்த மறுவரையறை என்று குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#Delimitation: Let the flames of resistance spread across Tamil Nadu!
Let the arrogance of the fascist BJP be brought down!🔥 Then, the fire of resistance against #HindiImposition that rose from Tamil Nadu scorched Delhi. It quietened only after Delhi was forced to yield.
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026
இதற்கிடையே கோவையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று விமர்சித்தார். “மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்ட திமுக, இப்போது கருப்புக் கொடி காட்டி நாடகம் ஆடுகிறது. இது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தடுப்பதற்கான மறைமுக முயற்சி” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு இருக்காது என்று உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஈபிஎஸ், முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகச் சாடினார். “சட்டம் அமலான பிறகு பாதிப்பு இல்லை என்றால், தனது அழுத்தத்தால் தான் இது நடந்தது என்று ஸ்டாலின் கிரெடிட் எடுத்துக் கொள்ளப் பார்ப்பார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட விமர்சனங்கள் மேலோங்கிய நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஈபிஎஸ் கடுமையாகத் தாக்கினார். அவரை ‘கரூரிலிருந்து வந்த விஷக்கிருமி’ என்று வர்ணித்த அவர், கரோனாவை விட ஆபத்தான இவரை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். தேர்தல் முடிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.





