தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே நேரடி மோதல் முற்றியுள்ளது. இன்று (ஏப்ரல் 11) புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
“அடிமைசாமி.. ஆமாம்சாமி..” – பெயரையே மாற்றிய ஸ்டாலின்
பரப்புரையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை ‘பாதம்தாங்கி பழனிசாமி’ என்று குறிப்பிட்டதோடு நிறுத்தாமல், அவருக்குப் புதிய பெயர்களையும் சூட்டினார். “அவர் பழனிசாமி இல்லை, டெல்லிக்கு ‘ஆமாம்’ போடும் ஆமாம்சாமி, பாஜகவிடம் சரணடைந்த அடிமைசாமி. தமிழ்நாட்டிற்குள் என்டிஏ (NDA) என்ற பேரிடரைப் பின்வாசல் வழியாகக் கொண்டுவரத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை அடிமைதான் இந்த பழனிசாமி,” என்று கடுமையாகச் சாடினார்.
“ஓனரை எதிர்த்துப் பேச முடியாது”
மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்து மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு குறித்துப் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி ஏன் மௌனம் காக்கிறார் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். “மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மோடியை ஒரே மேடையில் வைத்துக்கொண்டு, இது தமிழ்நாடு, இங்கே இருமொழிக் கொள்கைதான் நடக்கும் என்று பழனிசாமியால் சொல்ல முடியுமா? ஒரு அடிமையால் தன் ஓனரை எதிர்த்துப் பேச முடியாது,” என்று கிண்டல் செய்தார்.
நீட் விவகாரத்தில் மறைக்கப்பட்ட துரோகம்
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு செய்த துரோகங்களை ஸ்டாலின் பட்டியலிட்டார். “நீட் விலக்கு தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதையே இரண்டு ஆண்டுகளாக மறைத்து வைத்தவர் தான் இந்த பழனிசாமி. துரோகங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் அளவிற்குத் துரோகம் செய்துவிட்டு, இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கிறார்?” என்று முதல்வர் ஆவேசமாக வினவினார்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதலும் பாஜகவின் அஜெண்டாவும்
பாஜகவின் முக்கிய அஜெண்டாவே சிறுபான்மையினரை அச்சத்திலேயே வைத்திருப்பதுதான் என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், மணிப்பூர் கலவரம் மற்றும் சிஏஏ (CAA) விவகாரங்களைச் சுட்டிக்காட்டினார். “இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த அநீதிகளுக்குத் துணை போகும் அதிமுகவிற்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மதச்சார்பற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டைப் பாதுகாக்க திமுக என்றும் முன்னிற்கும்,” என்று உறுதி அளித்தார்.
தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கும் தார்மீக உரிமை தனக்கு இருப்பதாகவும், ஆனால் பழனிசாமியால் அப்படி எதையும் சொல்ல முடியாது என்றும் ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார். புதுக்கோட்டையில் ஸ்டாலின் காட்டிய இந்த ஆக்ரோஷம், 2026 தேர்தல் களத்தில் திமுகவின் பிரசார வியூகம் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளது.





