“பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டது!” – தொகுதி மறுவரையறையை 2051 வரை தள்ளிவைக்க ஸ்டாலின் அதிரடி முழக்கம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி” எனக் கொண்டாடியுள்ளார். திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அவர், நாமக்கல்லில் திமுக ஏற்றிய போராட்ட நெருப்பு, பாஜகவின் தொகுதி மறுவரையறைத் திட்டத்தைச் சாம்பலாக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

மேட்டுப்பாளையத்தில் பேசிய ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சையே அவருக்கு எதிராகத் திருப்பினார். “2023-லேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்திவிட்டதாகக் கூறும் பிரதமர், பிறகு ஏன் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வர முயன்றார்? இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். எங்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கிண்டலாகத் தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் வலிமையைக் குறைக்கும் சதி என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 2051-ஆம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “இது ஒரு அரை வெற்றிதான், போராட்டம் இன்னும் முடியவில்லை” என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமையாததைச் சுட்டிக்காட்டிய அவர், இதுதான் பாஜக சொல்லும் “இரட்டை இன்ஜின்” அரசின் லட்சணமா எனக் கேள்வி எழுப்பினார். கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் செந்தில் பாலாஜியை நிறுத்தியது தனது முடிவுதான் என்றும், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையை திமுக தகர்க்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  உங்க ஓட்டு தான் 'பவர்'! தமிழகத் தேர்தலில் கிங் மேக்கராகும் தெலுங்கு பேசும் மக்கள்; திமுக - அதிமுக போடும் மெகா ஸ்கெட்ச்!

பாஜக நாட்டை வடக்கு-தெற்கு எனப் பிரிக்க முயல்வதாகவும், அதற்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார். ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி வரும் தேர்தல்களில் பாஜகவின் அனைத்துச் சதிகளையும் முறியடிக்கும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Comment