தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக-பாஜக கூட்டணி இடையே மொழிப்போர் மற்றும் நேரடி அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள விவகாரம், தமிழகத்தில் மீண்டும் ஒரு “இந்தி எதிர்ப்பு” அலையை உருவாக்கியுள்ளது.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லும் துணிச்சல் பிரதமர் மோடிக்கோ அல்லது அமித் ஷாவிற்கோ இருக்கிறதா?” என பகிரங்கமாகச் சவால் விடுத்தார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கான ஒரு மறைமுகத் திட்டமே இது என்றும், தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் ஆவேசமாக முழங்கினார்.
தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்… பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் திமுகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும், வரும் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிப் புதிய ஆட்சியை அமைக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் ஜோதிடம் கணிப்பது போல் கூறினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், திமுகவின் செல்வாக்கு சரிந்துவிட்டதை உணர்ந்தே அவர்கள் நடிகர் விஜய்யைத் தூண்டிவிட்டு எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். “விஜய் மீண்டும் சினிமாவுக்கே போக வேண்டியிருக்கும், மக்கள் என்டிஏ கூட்டணியைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்” என்று அவர் கிண்டலாகத் தெரிவித்தார். 234 தொகுதிகளில் அதிமுக 169 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள தேர்தல் அட்டவணைப்படி… ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொழிப்போர் விவகாரத்தை திமுக தனது கையில் எடுத்துள்ள நிலையில், ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்விகளை முன்வைத்து பாஜகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) முதல் முறையாகக் களமிறங்குவதால், இந்தத் தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக மாறி வாக்காளர்களைப் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தி திணிப்பு விவகாரம் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் திமுகவிற்குச் சாதகமான அலையை உருவாக்குமா அல்லது பாஜகவின் வளர்ச்சி அதனைத் தடுக்குமா என்பது மே 4 அன்று தெரிந்துவிடும். தமிழகத்தின் கல்வி உரிமைகளைப் பறிக்க நினைக்கும் சக்திகளை மக்கள் வீழ்த்துவார்கள் என்று ஸ்டாலின் உறுதியாகக் கூறி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.





![[லஞ்சம் இல்லை, அலைக்கழிப்பு இல்லை]: "சிபிஎஸ்இ NOC-க்கு ₹50 லட்சம் வாங்குனாங்க; இப்போ ₹1 கூட இல்லாமல் இலவசம்!" புதிய அரசை பாராட்டும் தனியார் பள்ளிகள்! Tamil Nadu School Education Minister Rajmohan distributing official school recognition and CBSE NOC orders to private school association representatives at an event in Chennai.](https://hub.tamilnaduflashnews.com/wp-content/uploads/2026/06/education-minister-rajmohan-free-noc-private-schools-recognition-300x169.jpg)