[லஞ்சம் இல்லை, அலைக்கழிப்பு இல்லை]: “சிபிஎஸ்இ NOC-க்கு ₹50 லட்சம் வாங்குனாங்க; இப்போ ₹1 கூட இல்லாமல் இலவசம்!” புதிய அரசை பாராட்டும் தனியார் பள்ளிகள்!

தமிழக பள்ளி கல்வித்துறையில் புதிய அரசு பொறுப்பேற்றதற்குப் பின் அதிரடியான மற்றும் வெளிப்படையான பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொடர் அங்கீகார ஆணை (Recognition Order), நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான அங்கீகாரம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான புதுப்பித்தல் ஆணை மற்றும் சிபிஎஸ்இ என்.ஓ.சி (CBSE NOC) ஆகியவற்றை எவ்வித லஞ்சமும் இன்றி, நேர்மையான முறையில் புதிய அரசு வழங்கியுள்ளது தனியார் பள்ளி நிர்வாகிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும், துறை சார்ந்த இயக்குனர் மற்றும் செயலாளர்களுக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகள் சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், “கடந்த ஐந்து ஆண்டுகால முந்தைய ஆட்சியில் தனியார் பள்ளி நிர்வாகிகள் பட்ட சித்திரவதைகளுக்கு அளவே கிடையாது. மாவட்டம் தோறும், மாநிலம் தோறும் அமைச்சரையும் இடைத்தரகர்களையும் பார்த்துப் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போனோம். அதிகாரிகள் கூட கோப்புகளில் தேவையில்லாத குறைகளைச் சொல்லி, திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்து எங்களை அலைக்கழித்தனர்” என்று தங்களின் குமுறல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தங்கம் விலை குறைந்தது!: சவரனுக்கு ரூ.80 சரிந்தது! புதிய உச்சத்தில் இருந்து குறைந்த தங்கம், வெள்ளி விலை! இன்றைய (ஜூன் 16, 2026) நிலவரம் இதோ!

“சுகாதார சான்று, தீயணைப்புத் துறை சான்று, கட்டிட உறுதிச் சான்று, பில்டிங் பிளான் அப்ரூவல் என எல்லாமே சரியாக இருந்தாலும், நிரந்தர அங்கீகாரம் மற்றும் பள்ளிகள் தரம் உயர்த்துதல் (Upgradation) போன்ற பணிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டும், வருடக் கணக்காக எங்களை அலைக்கழித்து நாசம் செய்தார்கள். மெட்ரிக் அல்லது ஸ்டேட் போர்டில் இருந்து சிபிஎஸ்இ சிலபஸ்க்கு மாறும் போது வழங்கப்படும் என்.ஓ.சி-க்கு (NOC) கடந்த ஆட்சியில் 30 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்கினார்கள். ஆனால், தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, தற்பொழுது 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிபிஎஸ்இ என்.ஓ.சி ஆணை ஒரு பைசா கூட இல்லாமல் முற்றிலும் இலவசமாக, எங்களை நேரில் அழைத்து வழங்கப்பட்டுள்ளது” என்று நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் கே.ஏ.செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்த போது மட்டுமே, ஒவ்வொரு மாவட்டமாகத் தேடி வந்து உணவளித்து இதுபோன்ற சாதாரண அங்கீகார ஆணைகளை வழங்கினார் என்றும், அவருக்குப் பின் வந்த கடந்த ஆட்சியில் மிகப்பெரிய நெருக்கடியையும் மன உளைச்சலையும் சந்தித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். தற்பொழுது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற ஒரே மாத காலத்திற்குள், எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் சென்னையில் வைத்து ஆயிரக்கணக்கான பள்ளி நிர்வாகிகளுக்கு இந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வரும் ஜூலை மாதம் முதல் ஆன்லைன் மூலமாகவே இந்த அங்கீகார ஆணைகள் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பைத் தனியார் பள்ளிகள் வெகுவாக வரவேற்றுள்ளன. அரசின் விதிகளுக்கு உட்பட்டு, நியாயமான முறையில் கல்வி கட்டணத்தை வசூலித்து, “கல்வி சிறந்த தமிழ்நாடாக” மாநிலத்தை உயர்த்த அரசுக்கு எப்போதும் பாலமாக இருப்போம் என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.