தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான தவெக மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான திமுக இடையே வார்த்தைப் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய புதிய ஆட்சியை “அரசியல் சுனாமி அல்ல, அது வெறும் சினிமா சுனாமி தான்” என்றும், இந்த அரசு ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
திமுவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விமர்சனத்திற்கு, தற்பொழுது முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையின் முக்கிய அமைச்சரான ராஜ்மோகன் அவர்கள் மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளி கல்வி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் ராஜ்மோகன், எதிர்க்கட்சிகளின் தற்போதைய விமர்சனங்களை முற்றிலும் நிராகரித்தார். “தவெக அரசு 5 ஆண்டுகள் மட்டும்தான் தாங்குமா என்று சிலர் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான்; இந்த விஜய் அரசு 5 ஆண்டுகள் அல்ல, அடுத்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து சாதனை படைக்கும்” என்று சவால் விட்டுள்ளார்.
திமுகவின் தயவில்தான் தற்போதைய தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்ற ஸ்டாலினின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்த அவர், மக்கள் கொடுத்த முழுமையான அங்கீகாரத்துடனும், தனித்துவமான பலத்துடனும் தான் புதிய அரசு மாநிலத்தை வழிநடத்தி வருகிறது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
கடந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்க்கட்சிகள் தவெக மீது வைத்த விமர்சனங்களை இந்த மேடையில் அமைச்சர் ராஜ்மோகன் நினைவு கூர்ந்தார். “தொடக்கத்தில் எங்களைப் பார்த்து இவர்கள் எல்லாம் ஆட்சிக்கே வர மாட்டார்கள், அரசியலில் இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏளனமாகப் பேசினார்கள். ஆனால், இன்று மக்கள் சக்தியோடு தவெக மிக கம்பீரமாக ஆட்சி அமைத்துள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தங்களது கடந்த 5 ஆண்டுகால ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று திமுகவினர் தங்களுக்குத் தாங்களே பாராட்டி வருவதை மக்கள் ஏற்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என்றும் அவர் மறைமுகமாகச் சாடினார்.
எதிர்க்கட்சிகள் தங்களது தோல்விகளை மறைப்பதற்காக இது போன்ற கருத்துக்களைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், காலத்திற்கு ஏற்ப மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை இன்னும் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றார். தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் முழுமையான ஆதரவோடு அமைந்துள்ள இந்த புதிய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதில் மட்டுமே தற்பொழுது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் ராஜ்மோகனின் இந்த அசைக்க முடியாத “50 ஆண்டுகால ஆட்சி” என்ற அதிரடிப் பேச்சு, தவெக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட விவாதங்களை உசுப்பி விட்டுள்ளது.





