எடப்பாடி பழனிசாமி பெரம்பலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஆளும் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தன்னை “பாஜகவின் அடிமை” என்று விமர்சித்து வருவதற்கு, மிகக் காரசாரமான பதிலடியை அவர் அங்கே பதிவு செய்தார். அரசியல் ஆதாயத்திற்காக திமுக தலைமை தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஒரு பழைய அறிக்கையைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி, “பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல மனிதர் என்று அன்றே கருணாநிதி பாராட்டியுள்ளார். ஆனால் இன்று ஸ்டாலின் அவரை விமர்சிப்பது முரண்பாடாக உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், காங்கிரஸுடன் திமுக வைத்துள்ள கூட்டணியை விமர்சித்த அவர், “தீய கூட்டணிகள் தோல்விக்கே வழிவகுக்கும் என்று கூறி காங்கிரஸை விட்டு வெளியேறியவர் கருணாநிதி; இன்று அதே கட்சியுடன் ஏன் ஸ்டாலின் கூட்டணி வைத்துள்ளார்?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர்… ஒரு காலத்தில் திமுகவை மிகத் தீவிரமாக விமர்சித்த மதிமுக, தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்று அதே கூட்டணியில் அங்கம் வகிப்பதைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற சந்தர்ப்பவாதக் கூட்டணியை வைத்துக் கொண்டு அதிமுகவை விமர்சிக்க திமுகவிற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், திமுகவின் மூத்த தலைவர் ஆ.ராசா தொடர்பான சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரத்தையும் அவர் கிளப்பினார். கருணாநிதி குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய ஆ.ராசாவைக் கண்டிக்க ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா என்று அவர் சவால் விடுத்தார். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால் இன்னும் பல ரகசிய ஆடியோக்கள் வெளியாகும் என்ற பயத்திலேயே திமுக தலைமை அமைதி காப்பதாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மற்றொரு புறம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) குறித்தும்… அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கு.பா.கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதால், விஜய் ஆன்லைன் மூலம் பிரச்சாரம் செய்தாலே போதும், அது மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். திருச்சியில் மீண்டும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி தவெக-விற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டதாக அவர் கூறினார்.
தமிழகத் தேர்தல் களம் ஏப்ரல் 23-ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் துணிச்சலான பதிலடி அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு இடையே மூண்டுள்ள இந்த நேரடி வார்த்தைப் போர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வரும் மே 4-ஆம் தேதி மக்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.





