புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளுக்குப் மருந்து நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்து 10 மடங்கு வரை அதிகபட்ச விற்பனை விலையை (MRP) நிர்ணயம் செய்து பகல் கொள்ளையில் ஈடுபடுவது குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “சில்லறை விற்பனையாளருக்கு ரூ. 2,700-க்குக் கிடைக்கும் ஒரு புற்றுநோய் மருந்து, நோயாளிகளுக்கு ரூ. 27,000 என்று அச்சிடப்பட்டு விற்கப்படுவது அப்பட்டமான பகல் கொள்ளை அன்றி வேறென்ன?” என்று மிகக் காரமாகக் கேள்வி எழுப்பியது.
இத்தனை ஆண்டுகளாக நாட்டின் 82 சதவீத மருந்துகள் ‘அத்தியாவசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை’ (DPCO) வரம்பிற்குள் கொண்டு வரப்படாமல், மருந்து நிறுவனங்களின் ஆரம்பகட்ட விலை நிர்ணயத்திற்கே விட்டுவைக்கப்பட்டது ஏன் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இந்தச் சட்டப்பூர்வமான துவாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் மருத்துவ மாஃபியாக்கள் மற்றும் முன்னணி தனியார் மருத்துவமனைகள் மருந்துகளைப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றுச் சாமானிய மக்களைப் பொருளாதார ரீதியாகப் பிழிந்தெடுத்து வருகின்றன. அத்துடன், நோயாளிகளைத் தங்களின் சொந்த மருத்துவமனை பார்மசிகளிலேயே மருந்துகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் நடைமுறையையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
மேலும், மத்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற இலவசக் காப்பீட்டுத் திட்டங்களிலும் இந்த மாஃபியா கும்பல் முறைகேடு செய்வதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தனியார் மருத்துவமனைகள் அடிமட்ட விலைக்கு மருந்தை வாங்கி, அரசாங்கக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகபட்ச எம்.ஆர்.பி விலையைக் கணக்கு காட்டி அரசிடமிருந்து ரீஇம்பர்ஸ்மென்ட் தொகையைப் பெறுகின்றன. இதனால் நோயாளிகள் மட்டுமின்றி, நாட்டின் வரி செலுத்துவோரின் பணமும் பெருமளவில் விரயமாவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உடனடியாக அனைத்து மருந்துகளுக்கும் 16 சதவீத இலாப வரம்பை நிர்ணயிக்கவும், இந்த மருத்துவ மாஃபியாக்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.