முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மைப் படை வீடாகப் போற்றப்படும் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று (நவம்பர் 16) அதிகாலை மங்கள வாத்தியங்கள் முழங்கக் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனிதக் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘அரோகரா’ கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் தொடங்கி வரும் நவம்பர் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் இந்தத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை வேளையில் தங்கச் சப்பரம் மற்றும் விடையாத்தி சப்பரத்திலும், இரவு வேளையில் பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாகனங்களிலும் சுப்பிரமணிய சுவாமியும் தெய்வானை அம்மனும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருவிழாவின் முதல் நாளான இன்றும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற நவம்பர் 23-ஆம் தேதி இரவு சுப்பிரமணிய சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலையில் திருக்கோயில் தேரோட்ட வீதிகளில் கண்கவர் வைர தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இறுதியாக, நவம்பர் 25-ஆம் தேதி காலையில் சரவணப் பொய்கையில் நடைபெறும் தீர்த்த உற்சவத்துடன் பத்து நாள் கார்த்திகை தீபத் திருவிழா இனிதே நிறைவடைகிறது. பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.