Just ₹35 per Kg? – ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம்! செப்டம்பர் 5 முதல் விற்பனை! தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகளில் (நியாயவிலைக் கடைகள்) மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசும் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பும் (NAFED) இணைந்து தமிழகத்திற்குத் தேவையான வெங்காயக் கையிருப்பை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

முதற்கட்டமாக நகர்ப்புற மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் (Farm Fresh Consumer Outlets) மூலமாக கிலோ ₹35 வரை குறைந்த விலையில் வெங்காயத்தை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்தின் முக்கியக் கிடங்குகளுக்கு வெங்காயம் கொண்டு வரப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அரசு எடுத்துள்ள இந்தத் துரித நடவடிக்கையின் மூலம் வெளிச்சந்தையில் நிலவும் செயற்கையான விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படுவதோடு, பொதுமக்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி குறைந்த விலையில் தரமான வெங்காயத்தைப் பெற்றுப் பயனடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.