“தோளில் கணவரைச் சுமந்து 180 கி.மீ நடைபயணம்!” – நெஞ்சை நெகிழ வைக்கும் உத்தரப் பிரதேச பெண்!

கணவன் மீது கொண்ட எல்லையற்ற அன்பினாலும், நம்பிக்கையினாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது கணவனைத் தனது தோள்களிலேயே சுமந்துகொண்டு 180 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட மனைவியின் நெகிழ்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் மோடிநகர் அருகே உள்ள பக்ரவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின் – ஆஷா தம்பதியர். தீவிர சிவன் பக்தரான சச்சின், ஆண்டுதோறும் தவறாமல் கன்வர் யாத்திரை சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக நடந்த பயங்கர விபத்து ஒன்றில் சச்சினுக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு, உடலின் கீழ்ப்பகுதி முற்றிலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் எழுந்து நிற்கவோ அல்லது நடமாடவோ முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோதிலும் மனம்தளராத மனைவி ஆஷா, குடும்பத்தைக் காப்பாற்றி வந்த சூழலில், ஹரித்வாருக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்ற கணவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றத் துணிந்தார்.

அதன்படி, தனது இரு குழந்தைகளுடன் புறப்பட்ட ஆஷா, தனது கணவர் சச்சினைத் தன் தோள்களிலேயே சுமந்துகொண்டு மோடிநகரிலிருந்து ஹரித்வார் வரை சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாகக் கால நடைபயணமாகவே கடந்து சாதனை படைத்துள்ளார். வழியெங்கும் இவர்களின் தன்னலமற்ற அன்பையும் தியாகத்தையும் பார்த்த பொதுமக்கள், அவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கிப் பரவசத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "DM அங்கிள், நீங்க ரொம்ப நல்லவர்!" சேறும் சகதியுமான சாலையைச் சீரமைக்கக் கோரிய 6 வயது சிறுமி; வீடியோ வைரலானதும் பறந்து வந்த அதிகாரிகள்!

இறுதியில் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரிப் பகுதியை அடைந்த ஆஷா, அங்கு புனித கங்கா தீர்த்தத்தைச் சேகரித்துத் தக்சேஸ்வர மகாதேவ் கோவிலில் கணவருடன் சேர்ந்து வழிபாடுகளை நிறைவு செய்தார். தன்னலமற்ற தியாகத்திற்கும் உண்மையான அன்புக்கும் இலக்கணமாகத் திகழும் இந்தத் தம்பதியின் நெகிழ்ச்சிகரமான பயணம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது.