சமூக வலைதளங்கள் நினைத்தால் ஒரு சாமானியனின் குரலையும் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்குக் கேட்கச் செய்ய முடியும் என்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முன் உள்ள அவலநிலையை மாற்ற எடுத்த சிறு முயற்சி இன்று ஒரு கிராமத்தின் முகவரியையே மாற்றியுள்ளது.
அந்தச் சிறுமி வசிக்கும் பகுதியில் நீண்ட நாட்களாகச் சாலை சீரமைக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி அந்த இடமே பயன்படுத்த முடியாத சூழலில் இருந்துள்ளது. இதைக் கண்டு வருத்தமடைந்த அந்தச் சிறுமி, தனது மழலை மொழியில் ஒரு வீடியோவைப் பதிவு செய்தார். அதில், தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து சென்றுகொண்டே, “DM அங்கிள், நீங்கள் மிகவும் நல்லவர்… தயவு செய்து எங்கள் வீட்டின் அருகே உள்ள இந்தச் சாலையைச் சீரமைத்துக் கொடுங்கள்” என்று மிகவும் உருக்கமாகப் பேசியிருந்தார்.
Hello @DMKheri,
Kindly listen to this innocent child’s request and construct a proper road for her!
Also, kindly ensure such roads never become a roadblock for children who want to study, or for commuters who want to travel from one place to another.pic.twitter.com/84RUZcDD0C
— #YeThikKarkeDikhao (@YTKDIndia) May 5, 2026
இந்த வீடியோ இணையதளங்களில் பதிவேற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே காட்டுத்தீயாகப் பரவியது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அந்தச் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். வீடியோவின் தாக்கம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றதும், அவர் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகக் களத்தில் இறங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வீடியோ வைரலான 24 மணிநேரத்திற்குள்ளேயே, சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து சேர்ந்தனர். தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, சாலை பழுதுபார்ப்புப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டன. ஒரு சிறுமியின் மழலை மொழிக்கு மதிப்பளித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், தனது கோரிக்கைக்குப் பலன் கிடைத்ததைக் கண்டு அந்தச் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.





