இந்திய ஐடி துறைக்கு ஜாக்பாட்! அமெரிக்காவில் டிரம்ப்பின் அதிரடி விசா கட்டணம் ரத்து… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு… லட்சக்கணக்கானோருக்கு நிம்மதி!

அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய அசுவாசமான செய்தியாக, டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகம் கொண்டு வந்த எச்-1பி (H-1B) விசாக்களுக்கான 1,00,000 டாலர் கூடுதல் கட்டண உயர்வை அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாசசூசெட்ஸ் மாகாண போஸ்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் (Judge Leo Sorokin), இந்த கட்டண உயர்வு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் விதிக்கப்பட்ட சட்டவிரோதமான வரி விதிப்பு என்று கூறி இந்த கொள்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளார்.

அதிபர் நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து 20 மாநிலங்களின் அட்டர்னி ஜெனரல்கள் தொடர்ந்த வழக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு அவசர நிலையைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் பணியாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த அதிபருக்கு அதிகாரம் இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் வாதிட்டது. ஆனால், புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும், வரிகளை விதிப்பதற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு (Congress) மட்டுமே முழுமையான அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் மிகத் தெளிவாக நிலைநிறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நெஞ்சை உருக வைத்த வைரல் காட்சி! நடுரோட்டில் நெளிந்த பாம்பு... பதறாமல் துணியை வைத்து காப்பாற்றிய நபர்... இணையத்தில் குவியும் லைக்குகள்!

முன்னதாக, டிசம்பர் 2025 இல் வாஷிங்டன் நீதிமன்றம் இந்த கட்டணத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்பொழுது மாசசூசெட்ஸ் நீதிமன்றம் இதற்கு நேர்மாறாக நாடு தழுவிய அளவில் இந்த கட்டணத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த முரண்பாடான தீர்ப்புகள் காரணமாக, இந்த விவகாரம் அடுத்ததாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு (Supreme Court) செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வழங்கும் மொத்த எச்-1பி விசாக்களில் சுமார் 75 சதவீத விசாக்களை இந்தியப் பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களுமே பெற்று வருகின்றனர் என்பதால், இந்த தீர்ப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கும் ஐடி துறைக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த 1,00,000 டாலர் (சுமார் ₹83 லட்சம்) கூடுதல் கட்டணக் கெடுபிடி காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுப்பது கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 38 சதவீதம் வரை சரிவடைந்தது. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள், கிராமப்புற மருத்துவமனைகள் போன்ற சிறிய அமைப்புகள் வெளிநாட்டுத் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாமல் முடங்கின.

தற்பொழுது நீதிமன்றத்தின் இந்த தலையீட்டால் விசா கட்டணங்கள் மீண்டும் அதன் பழைய நிலையான 2,000 டாலர் முதல் 5,000 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளன. இதன் மூலம் டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏற்படவிருந்த கோடிக்கணக்கான ரூபாய் கூடுதல் செலவினங்கள் தவிர்க்கப்பட்டு, இந்தியர்களின் அமெரிக்கக் கனவு மீண்டும் பிரகாசமாகியுள்ளது.