அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இறுதி கட்ட அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகப் போகும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவு ஒட்டுமொத்த உலக அரசியலிலும், குறிப்பாக புதுடெல்லி மற்றும் டெஹ்ரான் தூதரக வட்டாரங்களிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியை விட்டு வெளியேறிய இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ஒரு பயங்கர ட்ரோன் (Drone) தாக்குதலை நடத்தியதாகவும், அதனை அமெரிக்கப் படைகள் முழுமையாக முறியடித்துள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் தனது பதிவில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஈரானின் இந்த நடவடிக்கை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் அதில் கடுமையாகச் சாடியுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடிப் புகாரைத் தொடர்ந்து, இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய இந்திய மற்றும் ஈரான் தரப்பு பாதுகாப்பு உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் இந்தத் தகவலை முழுமையாக மறுத்துள்ளனர். வியாழக்கிழமை இரவு அல்லது அதற்குப் பிறகோ ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியிலோ அல்லது ஓமன் வளைகுடா பகுதியிலோ இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்கள் மீது எந்தவொரு ட்ரோன் தாக்குதலும் நடத்தப்பட்டதாகப் பதிவுகள் எதுவும் இல்லை என்று இரு நாட்டு அதிகாரிகளும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போது ஈரானால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் குறைந்தது 13 இந்தியக் கப்பல்கள் கடந்து செல்வதற்காகக் காத்திருக்கும் சூழலில், டிரம்பின் இந்தத் திடீர் அறிக்கை இந்திய மாலுமிகளின் குடும்பத்தினர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இரு நாட்டு அரசுகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கூட்டு அறிக்கையையும் வெளியிடவில்லை.
டிரம்பின் இந்தப் பேச்சு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதுடெல்லியில் உள்ள மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஜேசன் மீக்ஸ் (Jason Meeks) என்பவரை நேரில் அழைத்து இந்த வாரத்தில் இரண்டாவது முறையாகக் கண்டனம் தெரிவித்த அதே நாளில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், இந்திய மாலுமிகள் பணிபுரிந்த மூன்று வணிகக் கப்பல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதில் மூன்று இந்தியச் மாலுமிகள் பரிதாபமாகப் பலியாகினர். இந்த விவகாரத்தில் அமெரிக்கா மீது இந்தியா ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், டிரம்ப் தற்பொழுது ஈரானை நோக்கிப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் புகாரைக் கிளப்பியுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ட்ரோன் தாக்குதல் புகாரைக் கிளப்பியதற்குப் பின்னால் மற்றொரு முக்கியக் காரணமும் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட ரகசிய அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய 14 புள்ளி வரைவுத் திட்டங்களை (Draft Deal) ஈரானிய ஊடகங்கள் “ஃபேக் நியூஸ்” (Fake News) தளங்களுக்குக் கசியவிட்டுள்ளதாக டிரம்ப் தனது பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் தரப்பில் கசிந்த நிபந்தனைகளுக்கும், நாம் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட உண்மையான நிபந்தனைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்” என டிரம்ப் சாடியுள்ளார்.
இருப்பினும், இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் சமூக வலைதளங்களில், “அமெரிக்கா-ஈரான் இடையேயான இறுதி அமைதி ஒப்பந்தத்தின் உரை வடிவம் முழுமையாக எட்டப்பட்டுவிட்டது, அடுத்தகட்டப் பணிகளை இறுதி செய்யப் பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் நெருங்கிச் செயல்பட்டு வருகிறது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ட்ரோன் தாக்குதல் விவகாரம் வெறும் அரசியல் உத்தியா அல்லது உண்மையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்ததா என்ற மர்மம் நீடித்து வருகிறது.





