“விளம்பர தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!” தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி கொடூரங்களால் உறைந்துபோன கனிமொழி… மக்கள் வரிப்பணத்தில் எதற்கு ‘சிறப்பு படை’? திமுக எம்பியின் அதிரடி தாக்குதல்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சியில் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தூத்துக்குடி மற்றும் கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் கொடூரங்களைச் சுட்டிக்காட்டி, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில், 12 வயது சிறுமி ஒருவருக்குப் போதகரால் நேர்ந்த பாலியல் தொல்லை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பதிவிட்டுள்ள கனிமொழி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்குமே பாதுகாப்பில்லை என்னும் பயங்கரமான சூழல் உருவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்பு கொள்வதற்குத் தனியாக ஒரு அவசர உதவி எண் கூட இல்லாத ஒரு ‘சிறப்பு படை’யை (Special Force) உருவாக்கி, இந்த தவெக அரசு வெறும் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.

ஏற்கனவே சமூகநலத் துறை சார்பில் மகளிர் பாதுகாப்புக்காக 181 எண்ணும், தேசிய அளவில் பல காலமாக 1098 குழந்தைகள் உதவி எண்ணும் நடைமுறையில் இருப்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த எண்கள் இருக்கும் போது, மக்கள் வரிப்பண வீணடிப்பாக எதற்குத் தனியாக ஒரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என்றும், எந்தவொரு சட்டப்பூர்வ சிறப்பு அதிகாரமும் இல்லாத இந்த சிறப்புப் படையால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Telegram Blocked vs WhatsApp: இந்தியாவில் டெலிகிராம் ஆப்பிற்கு அதிரடி தடை! வாட்ஸ்அப்பை விட்டுவிட்டு டெலிகிராமை மட்டும் மத்திய அரசு முடக்கியது ஏன்? முழு விபரம் இதோ!

மேலும், கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் 3 வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட மற்றொரு அநாகரிகச் சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலத்தில் ஒரு அரசு இயங்குகிறதா என்று சந்தேகிக்கும் அளவுக்குத் தான் தற்போதைய தவெக ஆட்சி நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் இந்த ஆட்சியில், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.