Strict Order for Ration Card Holders! “இனி இதை செய்யலைனா பொருட்கள் கிடைக்காதா?!” குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு போகணும்! கூட்டுறவுத் துறை பிறப்பித்த புதிய ரூல்ஸ்!

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் நிலவி வரும் முறைகேடுகளைக் களைவதற்கும், தகுதி வாய்ந்த உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தற்பொழுது மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்கு நேரடியாகச் சென்று, தங்களது கைவிரல் ரேகை பதிவினை (Biometric) மற்றும் கார்டோடு இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் முன்னுரிமை, முன்னுரிமையற்ற, அரிசி அல்லது சர்க்கரை அட்டை என ஐந்து வகைப்பாடுகளின் கீழ் ஒட்டுமொத்தமாக 2.20 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன. நாளுக்கு நாள் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், குடும்பத்தில் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யாத குடும்பங்களின் எண்ணிக்கை இன்றளவும் ஏராளமான அளவில் இருந்து வருகிறது.

இதனால் தகுதியான ஏழை எளிய மக்களுக்குப் பொருட்களைச் சரியாக விநியோகம் செய்வதில் அரசுக்குத் தொடர்ச்சியாகப் பெரும் சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காகவே தற்போது இந்த புதிய கைரேகை சரிபார்ப்பு நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 24,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இந்த சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. நுகர்வோர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடைக்குத் தங்களது ஸ்மார்ட் கார்டை நேரடியாக எடுத்துச் சென்று, அங்குள்ள விற்பனையாளரிடம் பிஓஎஸ் (POS) மெஷின் மூலமாகத் தங்களது கைரேகையை மறுபதிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் விவரங்களும் துல்லியமாகச் சரிபார்க்கப்படும். பொதுமக்கள் இந்தச் சரிபார்ப்பை எளிதாகச் செய்யும் வகையில், வரும் நாட்களில் ரேஷன் கடைகள் மூலமாகவே சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட உள்ளதாகத் துறையின் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தீவிர கணக்கெடுப்பின் மூலமாக, குடும்ப அட்டைகளில் இன்னும் நீக்கப்படாமல் இருக்கும் இறந்தவர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு அவை உடனடியாக கார்டில் இருந்து நீக்கப்படும். இதன் விளைவாக, கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் முறைகேடாக விற்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும் என நுகர்வோர் வழங்கல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கும், கடை விற்பனையாளர்களுக்கும் அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் வரும் நாட்களில் தங்களது ரேஷன் கடைகளில் உரிய கைரேகை சரிபார்ப்பை முடித்து, எவ்வித தடையுமின்றி தங்களது குடும்பத்திற்கான பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.