SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!

மத்திய அரசின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்குவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் தொடங்கக் கடந்த 2017 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இன்னும் 3 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று அதிரடியாகக் கெடு விதித்துள்ளனர்.

இவ்வழக்கின் விசாரணையின் போது, முடிவெடுக்க 12 வாரக் கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்தது. மேலும், “ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். விசாரணையின் போது பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மக்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்” என்ற மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார்.

அதே நேரத்தில், மற்றொரு நீதிபதியான பி.வி.நாகரத்தினா கூறுகையில், “தமிழகத்தில் நவோதயா பள்ளி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி என்பது மாணவர்களுக்குத் தேவையற்ற மனஉளைச்சலைத் தரும். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருக்கடி 9-ஆம் வகுப்பிலேயே தொடங்கிவிடுவதால், 3-வது மொழியை 5 அல்லது 6-ஆம் வகுப்புகளிலேயே அறிமுகம் செய்யலாம்” என்று தனது கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த உத்தரவு தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறையில் தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.