தமிழ்நாட்டில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புகளில் சேர்வதற்கான பொதுக் கலந்தாய்வு நிறைவடையும் தருவாயை எட்டியுள்ள நிலையில், தற்போது துணை கலந்தாய்வு (Supplementary Counseling) குறித்த மிக முக்கியமான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DoTE) வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்விற்கு வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தகுதியான மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், இதற்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறவுள்ளது.
இந்தப் பொறியியல் துணை கலந்தாய்வில் பிளஸ்-2 துணைத் தேர்வில் (Supplementary Exams) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இதற்கு முன்பு நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் விண்ணப்பிக்கத் தவறிய புதிய மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்றும் இடம் கிடைக்காத தகுதியான மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மாணவர்கள் www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி வாயிலாகத் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்து சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும், கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள 1800-425-0110 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தியுள்ளது.





