“கலெக்டர் பங்களாவில் சிசிடிவி இருக்கு, எப்படி போக முடியும்?” – தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆவேச விளக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் குறித்துத் தம்மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகளுக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், “எல்லாருக்கும் இந்த வதந்திகள் குறித்துத் தெரியும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறேன். வதந்திகள் யாவும் முற்றிலும் பொய்யானவை. கலெக்டர் பங்களாவில் பலத்த பாதுகாப்புக் காவலர்களும் சிசிடிவி கேமராக்களும் உள்ளன. அப்படி இருக்க நான் அங்கு எப்படிச் செல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றும், பொதுமக்களின் நல்வாழ்வுக்காகவும் கட்சித் தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் தவெகவின் கொள்கைகளுக்காகவும் உழைக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே ஆதாரமற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இதுபோன்ற போலிப் பிரச்சாரங்களை எதிர்கொள்ள நான் எத்தகைய பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன். நான் இதுபோன்ற எந்தத் தவறும் இழைக்கவில்லை. தயவுசெய்து இதுபோன்ற மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். நாங்கள் மக்களுக்காகச் சேவை செய்யவே வந்துள்ளோமே தவிர, இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க அல்ல” என்றார். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்துக் கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.