காவிரி நீர் உரிமை மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காப்பதாகக் கூறி, முதல்வர் C. ஜோசப் விஜய்க்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், காவிரி விவகாரம் குறித்து எந்தவொரு விவரமும் முதல்வருக்குத் தெரியாது என்றும், அதனால் அவர் அதனை உதாசீனப்படுத்தி வருவதாகவும் சாடினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மு.க. ஸ்டாலின், முதல்வர் விஜய் இதுவரை இந்த விவகாரத்தில் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். முதல்வர்கள் எங்கே சென்றுவிட்டார்கள், காவிரி விவகாரம் குறித்து அவர் என்ன கூறினார் என்று ஊடகவியலாளர்கள் தான் முதல்வரை கேள்வி கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா குறித்துப் பேசிய அவர், தனக்கு முறைப்படி அழைப்பு வரவில்லை என்றாலும், தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது வாழ்த்துகளை எழுத்துப்பூர்வமாக அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் ஆக்கபூர்வமான இருதரப்புப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை எனத் தெரிவித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கடந்த ஆறு மாத கால ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தல் லாபத்திற்காகத் தமிழகத்தின் நீர் உரிமையைப் பறிப்பதில் ஒன்றுபட்டுச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
கர்நாடகத்தின் கனகபுரா அருகே காவிரியின் குறுக்கே சுமார் 9,000 கோடி ரூபாய் செலவில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் கூறப்படும் இந்தத் திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கும் எதிரானது எனக் கூறி தமிழகம் இதனை எதிர்த்து வரும் நிலையில், டெல்லி சென்று மத்திய ஜல சக்தி அமைச்சரைச் சந்தித்துத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தனது எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்ய உள்ளார்.