புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்ற பொதுவான நம்பிக்கை பலரிடமும் நிலவுகிறது. ஆனால், புகைபிடிக்காத நபர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயம் பெருமளவில் உள்ளது என்பதே தற்போதைய கள யதார்த்தமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இதன் ஆரம்பக்கால அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, சமையலறை புகை, செயலற்ற புகைபிடித்தல் (Secondhand smoke) மற்றும் மரபியல் காரணங்களால் புகைபிடிக்காதவர்களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
சமீபத்திய மருத்துவ விழிப்புணர்வுத் தகவல்களின்படி, தொடர் இருமலை சாதாரணமாகக் கருதி அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய ஆபத்தில் முடிவடையக்கூடும். மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இருமலை சாதாரண சளி அல்லது காற்று மாசுபாட்டினால் ஏற்பட்டது என நினைக்காமல், உடனடியாகப் பரிசோதித்துக் கொள்வது ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறிய உதவும்.
நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும் 5 முக்கிய வாழ்வியல் பழக்கங்கள் இதோ:
வீட்டின் உட்புறக் காற்றைச் சுத்தமாக வைப்பது முதல் முக்கிய தேவையாகும். சமையலறையில் சரியான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். கொசுவர்த்தி சுருள்கள், அளவுக்கு அதிகமான ஊதுபத்திகள் மற்றும் விறகு எறிப்பதால் வரும் புகையைக் தவிர்க்க வேண்டும். அதிக மாசுபாடு உள்ள காலங்களில் ‘ஹெபா’ (HEPA) ஏர் பியூரிஃபையர்களைப் பயன்படுத்தலாம்.
வெளியே செல்லும் முன் காற்றுத் தரக் குறியீட்டைப் (AQI) பரிசோதிப்பது அவசியமாகும். மாசுபாடு அதிகமாக இருக்கும் நாட்களில் வெளிப்புற உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்ல வேண்டியிருந்தால் கட்டாயம் நல்ல தரம் வாய்ந்த N95 அல்லது சர்ஜிகல் மாஸ்க் அணிய வேண்டும்.
நுரையீரலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வாரத்தில் 5 நாட்கள் தினமும் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மற்றும் எளிய மூச்சுப் பயிற்சிகள் செய்வது நல்லது. இது ஆக்ஸிஜன் சுழற்சியை அதிகரித்து நுரையீரல் கொள்ளளவை உயர்த்துகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, கீரை வகைகள், பாதாம், வாதுமை பருப்பு மற்றும் பழுப்பு அரிசி போன்ற உணவுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் செல் அழுத்தத்தை எதிர்க்க உதவுகின்றன.
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இருமல், காரணமில்லாத மூச்சுத்திணறல், ரத்தம் கலந்த சளி அல்லது திடீர் உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. ஆரம்பக்கட்டத்திலேயே கவனம் செலுத்துவது உயிரைக் காக்கும் சிறந்த வழியாகும்.





