வகுப்பறைக்குள்ள நேரா போயி முதல்வர் படத்தை வைக்கக் கூடாது! மீறினா ஹெட்மாஸ்டர் மேல ஆக்ஷன்! மேயர் பிரியா அதிரடி எச்சரிக்கை!: சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிரடி உத்தரவு! சம்பந்தம் இல்லாத நபர்களுக்குப் பள்ளிகளுக்குள் நுழையத் தடை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி வளாகங்களுக்குள் தேவையற்ற நபர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும், பள்ளிகளின் ஒழுங்குமுறையைப் பாதுகாக்கவும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா அதிரடியான உத்தரவுகளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “மாநகராட்சிப் பள்ளிகளுக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் தவிர, வேறு எந்தவொரு சம்பந்தம் இல்லாத வெளிநபர்களும் எக்காரணத்தைக் கொண்டும் உள்ளே நுழையக்கூடாது. பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து பள்ளிகளில் முதலமைச்சரின் புகைப்படங்களை வைப்பது குறித்துப் பேசிய அவர், “மாண்புமிகு முதலமைச்சரின் புகைப்படத்தைப் பள்ளிகளில் மாட்ட வேண்டும் என்று யாரேனும் விரும்பினால், அதனைப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் (Headmaster) மட்டுமே முறைப்படி வழங்க வேண்டும். அதைவிடுத்து, தலைமை ஆசிரியரின் அனுமதியின்றி மற்றவர்கள் யாராவது நேரடியாக வகுப்பறைகளுக்குள் (Classrooms) சென்று முதலமைச்சரின் புகைப்படத்தை வைக்கக் கூடாது. இந்த விதியையும் கட்டுப்பாட்டையும் மீறி வகுப்பறைகளுக்குள் வெளிநபர்கள் நேரடியாகச் சென்று படம் வைக்க அனுமதித்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மேயர் பிரியா மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.