அமெரிக்காவில் ‘கேண்டிடா ஆரிஸ்’ (Candida auris) என்ற கொடிய பூஞ்சைத் தொற்று 23 மாநிலங்களில் மிகத் தீவிரமாகப் பரவி வருவது மருத்துவ வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மருந்துகளுக்கே கட்டுப்படாத இந்த ஆபத்தான பூஞ்சை, இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பாதித்துள்ளது. குறிப்பாக டெக்சாஸ் மாநிலத்தில் அதிகபட்சமாக 706 வழக்குகளும், மிச்சிகனில் 503 வழக்குகளும், இல்லினாய்ஸில் 366 வழக்குகளும் பதிவாகியுள்ளன. வீடுகள் அல்லது பொது இடங்களில் இது பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கேண்டிடா ஆரிஸ் என்பது முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களைத் தாக்கும் ஒரு வகையான பூஞ்சையாகும். அமெரிக்க மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு மையங்களில் வென்டிலேட்டர், கதீட்டர் மற்றும் உணவுக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளிடையே இது எளிதில் பரவுகிறது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேற்பரப்புகளில் பல வாரங்கள் வரை உயிரோடு இருக்கும் திறன் கொண்ட இந்த பூஞ்சை, நோயாளிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மூலமாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ உடலுக்குள் நுழைகிறது. ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்றாலும், ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த ஓட்டத்தில் இது கலக்கும் போது உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்குகிறது.
இந்தக் கேண்டிடா ஆரிஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், குளிர்காச்சல், கடுமையான சோர்வு, உடல் வெப்பநிலை குறைதல், குறைந்த ரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் காதுகளில் ஏற்படும் சிறப்பு வகைத் தொற்றுகள் போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் தோன்றுகின்றன. மேலும், பலருக்கு எந்தவொரு வெளிப்புற அறிகுறிகளும் தோன்றாமலேயே உடலில் இந்த பூஞ்சை தங்கியிருந்து மற்றவர்களுக்குப் பரவும் அபாயமும் உள்ளது. பல முன்னணி பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளுக்கு (Antifungal drugs) கட்டுப்படாத அளவிற்கு இது எதிர்ப்புத் திறனைப் பெற்றுள்ளதே இதைக் கண்டு அஞ்சுவதற்கான முதன்மை காரணமாகும்.
இந்தக் கொடிய தொற்றைக் குணப்படுத்த ‘எச்சினோகாண்டின்ஸ்’ (Echinocandins) வகை மருந்துகள் முதன்மைச் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ‘அசோல்ஸ்’ (Azoles) மற்றும் ‘போலியீன்’ (Polyene) வகை பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டாலும், கேண்டிடா ஆரிஸின் மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாகச் சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதும் அவசியமாகிறது. தீவிர நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்கள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கூடுதல் விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகும்.





