தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் தனுஷின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கோவையில் வெளியாகியுள்ள ஒரு துண்டுப் பிரசுரம் இணையதளங்களில் காட்டுத்தீ போல பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“நமது அன்புத் தலைவர் தனுஷ் அவர்களின் கோவை மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகள்” என்ற தலைப்பில் வெளியான அந்த நோட்டீஸில், நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தனுஷ, ‘தற்போது நமது அன்புத் தலைவர் தனுஷ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே தனது பிறந்தநாள் மற்றும் இரத்ததான முகாம் போன்ற மன்ற நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசிய தனுஷ், ரசிகர்கள் வெறும் திரையரங்கக் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல் மக்கள் நலப்பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒற்றுமைக்கு ஒரு பெரிய நோக்கம் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் புதிய ரசிகர் மன்றக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது கோவை மாவட்டத்தில் தொகுதி வாரியாக நற்பணி இயக்கங்களை ஒருங்கிணைக்கும் நோட்டீஸ் வெளியாகியிருப்பது, தனுஷ் மறைமுகமாக அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டாரோ? என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

தளபதி விஜய் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி, பின்னர் தமிழக வெற்றி பெற்று அரசியல் களத்தில் தடம் பதித்தது போலவே, தனுஷும் அதே பாதையைப் பின்பற்றி அடித்தளத்தை அமைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, கடந்த வாரம் தான் படித்தப் பள்ளியில், பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவில்: தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்து அவர் பேசிய கருத்துகளும், சிவபக்தராக “ஓம் நமச்சிவாய” என்ற முழக்கத்துடன் உரையை முடிப்பதும், ரஜினிகாந்த் முன்னெடுக்க நினைத்த ஆன்மீக அரசியலை தனுஷ் கையில் எடுக்கிறாரோ? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இருப்பினும், தனுஷின் தரப்பிலிருந்து இந்த நற்பணி இயக்கச் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் தொண்டு நோக்கிலானவை என்றும், இதற்குப் பின்னால் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த துண்டுப் பிரசுரம் வைரலாகி வருவதால், “அடுத்தப்படியாக களத்திற்கு வரப்போவது தனுஷா?” என்ற விவாதம் இணையவாசிகளிடையே நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.




