சட்டப்பேரவையில் விதிகள் மீறப்பட்டதா? முதல்வர் விஜய் மீது சபாநாயகரிடம் திமுக உரிமை மீறல் புகார்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசிய கருத்துக்கள் பேரவை விதிகளை மீறும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்து, திமுக சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அதிகாரப்பூர்வமாக உரிமை மீறல் புகார் (Breach of Privilege) அளிக்கப்பட்டுள்ளது.

திமுக துணைத் தலைமைக் கொறடா கோவி. செழியன் சபாநாயகரை நேரில் சந்தித்து இந்த மனுவை அளித்தார். சட்டமன்றத்தில் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைமை மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய சூழலில், முதலமைச்சர் விஜய் பல தசாப்தங்களுக்கு முந்தைய சர்க்காரியா கமிஷன் விவகாரத்தைக் கையில் எடுத்துப் பேசியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டமன்ற விதிமுறைகளின்படி, அவையில் நேரில் இல்லாத நபர்கள் மீதோ அல்லது பதிலளிக்க முடியாத நிலையில் உள்ள மறைந்த மாபெரும் தலைவர்கள் மீதோ அவதூறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்காப்பு நடவடிக்கையாக அவையில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரின் பெயர்களை இழுத்துப் பேசியது சட்டப்பேரவை மரபுகளைச் சீர்குலைக்கும் செயல் எனத் திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "சைக்கிள் ஓட்டவா அரசியலுக்கு வந்தீர்கள்?" - திமுகவை ஆட்சியில் அமர்த்தவே விஜய் கட்சி தொடங்கியுள்ளதாக நயினார் நாகேந்திரன் பகீர் தாக்கு!

மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடிய மாபெரும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசப்பட்ட இந்தக் கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், சட்டமன்ற மரபுகளை மீறிச் செயல்பட்ட முதலமைச்சர் விஜய் மீது பேரவை உரிமை மீறல் குழு மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது சபாநாயகர் எடுக்கும் முடிவு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.