திமுக தோல்விக்கு இதுதான் காரணமா? 50 கால அனுபவத்தை தவிடுபொடியாக்கிய விஜய்யின் தவெக!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் (தவெக) 104 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம், ஆளுங்கட்சியான திமுக 68 இடங்களுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திமுகவை, கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் விஜய் வீழ்த்தியிருப்பது சாதாரண வெற்றியாகப் பார்க்கப்படவில்லை.

மக்களின் அதிருப்தியும் அரசின் செயல்பாடும் இந்தத் தோல்விக்கு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அவருக்குக் கீழ் இருந்தவர்கள் உண்மையை அவரிடம் மறைத்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் குறித்த புகார்கள் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தின. எல்லாத் துறைகளிலும் பெருகிய ஊழல், அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரம் இளைஞர்களைச் சீரழித்தது ஆகியவை திமுகவின் செல்வாக்கைக் குறைத்தன. குறிப்பாக, 15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையானதை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளாதது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "முதலமைச்சர் ஸ்டாலினை யாராலும் மிரட்ட முடியாது!" - ரணிப்பேட்டை தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

காவல்துறையின் அடக்குமுறை மற்றும் அணுகுமுறை மற்றொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. காவல் நிலைய உயிரிழப்புகள் மற்றும் போராட்டக்காரர்களைக் கையாண்ட விதம் ஆகியவை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டங்களை முடக்கிய விதம், அவர்கள் மீதான அடக்குமுறை எனப் பல நிகழ்வுகள் அரசுக்கு எதிராகத் திரும்பின.

விஜய்யின் அதிரடி விமர்சனங்கள் மக்களிடம் மிக எளிதாகச் சென்றடைந்தன. திமுகவை ‘தீயசக்தி’ என விஜய் விமர்சித்தது சமூக வலைதளங்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவி, ஒரு புதிய மாற்றத்திற்கான தேவையைக் கோடிட்டுக் காட்டியது. புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தவெக-வின் ‘விசில்’ சின்னத்தை ஆதரித்ததும், சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாகத் தவெக-வுக்குச் சென்றதும் திமுகவின் தோல்வியைத் தீர்மானித்துள்ளன.

அதீத தன்னம்பிக்கையும் கணக்கீடுகளும் இறுதியில் திமுகவுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளன. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் தங்களைக் காப்பாற்றும் என திமுக நம்பியது. ஆனால், அடிப்படைப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் ஆகியவற்றை மக்கள் பெரிதாகக் கருதி மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகிறது.

Leave a Comment