வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையில் நாளை முதல் அதிரடியான மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நகர்ப்புறங்களில் 21 நாட்களாக இருந்த இந்த கால இடைவெளி, நாளை முதல் 25 நாட்களாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ஒரு சிலிண்டர் டெலிவரி எடுக்கப்பட்ட தேதியிலிருந்து 25 நாட்கள் கழித்தே அடுத்த புக்கிங்கைச் செய்ய முடியும். அதேபோல், கிராமப்புறங்களைப் பொறுத்தவரை இந்த கால அளவு 45 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கணினி மூலம் தானியங்கி நிராகரிப்பு: இந்த புதிய விதியின்படி, நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிக்கு முன்பாகவே யாராவது சிலிண்டர் முன்பதிவு செய்ய முயற்சித்தால், அந்த விண்ணப்பத்தை கணினி மென்பொருள் தானாகவே நிராகரித்துவிடும். “உங்கள் முன்பதிவுக்கான கால அவகாசம் இன்னும் முடியவில்லை” என்ற செய்தியுடன் அந்தப் பதிவு ரத்து செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அவசரப்பட்டு முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏன் இந்த மாற்றம்? சமையல் எரிவாயு விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும், பதுக்கல்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஒரே மாதத்தில் பல சிலிண்டர்களைப் பதிவு செய்வதைக் கட்டுப்படுத்த இது உதவும். பொதுமக்கள் தங்களுக்கு சிலிண்டர் தேவைப்படும் தேதியைக் கணக்கிட்டு, இந்த புதிய கால வரம்பிற்கு ஏற்பத் தங்களது முன்பதிவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





