ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு: ‘ஆதாரம் இருந்தும் தப்பிக்க வைக்கப்பட்ட குற்றவாளிகள்’ – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரும் ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனருமான 84 வயதான ‘ஜெம்’ வீரமணி, சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ (POCSO) வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கு குறித்துப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துக் காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீதான போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வழக்கின் விசாரணை வரம்பை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சிறுமிகள் பாலியல் ரீதியாகச் சீரழிக்கப்பட்டதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தது தெரிந்திருந்தும், இந்த வழக்கின் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்வதற்கு கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சாடியுள்ளார்.

முன்னதாக, 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வீடியோ அடங்கிய பென்டிரைவ் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாம் காண முடியவில்லை என்றும் வீடியோ தெளிவற்று உள்ளது என்றும் கூறி இவ்வழக்கை முடிக்கக் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்தது. ஆனால், சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்து, மேல்விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மறுவிசாரணையில் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாகப் பல முக்கியத் திருப்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், வழக்கை மூடி மறைக்க முயன்ற பின்னணியில் பெரும் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைக்க அனைத்துக் குற்றவாளிகளுக்கும் தாமதமின்றி உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் தளத்தில் வலுத்து வருகிறது.