வழக்கம்போலத்தான்… எந்த ஒரு பெரிய குற்றச்சாட்டு வந்தாலும் அதிகாரத்துவ வட்டாரத்தில் இருந்து வரும் முதல் பதில் “இது முற்றிலும் அடிப்படையற்றது” என்பதுதானே! சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் பணியாற்றி வரும் 2022-ஆம் ஆண்டு பேட்ச் இளம் ஐபிஎஸ் அதிகாரி ராகுல் பன்சால் விஷயத்திலும் இது விதிவிலக்கல்ல.
சைபர் மோசடி வழக்கு ஒன்றை சத்தமில்லாமல் முடித்துவைக்க ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைக் கேட்டு, “எனக்கு நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது, புகார் எல்லாமே பொய்” என்று மிக நேர்த்தியாகப் பதிலைத் தட்டிவிட்டுுள்ளார் அதிகாரி பன்சால்.
2025 ஜூலையில் வெறும் ரூ.21 லட்சம் பங்குச் சந்தை ஏமாற்று வேலையாகத் தொடங்கிய இந்த வழக்கு, விசாரணை தீவிரமடைய தீவிரமடையத் துபாய் நெட்வொர்க், ஹவாலா வழிகள், ரூ.1,880 கோடி கிரிப்டோகரன்சிப் பரிவர்த்தனைகள் என அடுக்கடுக்காகப் பிரம்மாண்ட ரூபமெடுத்தது. சரி, இவ்வளவு பெரிய சர்வதேச கும்பலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வழக்கைக் கொண்டு சென்ற காவல்துறையினருக்கு என்ன ஆனது என்றால், அங்கேதான் கதையில் பெரிய திருப்புமுனை!
2026 மே மாதத்தில், வழக்கின் தீவிரத்தைக் குறைப்பதற்காகவே இரண்டு தவணைகளில் தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி கைமாறியதாகப் புகார்தாரர் வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களோடு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். இதில் பன்சாலுடன் சேர்த்து ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் பெயரும் அடிபடுகிறது.
இப்போது டெல்லி நீதிமன்றம் சத்தீஸ்கர் டிஜிபி மற்றும் சிபிஐ இயக்குநரிடம் அறிக்கை கேட்கும் நிலைக்கு விவகாரம் முற்றியுள்ளது. “8 மாநிலங்களில் 23 பேரைக் கைது செய்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம்” என்று புள்ளிவிவரங்களை அடுக்கும் அதே வேளையில், மேலதிகாரிகள் மீதான இந்த ரூ.1 கோடி ‘ஹவாலா டீல்’ புகாருக்கும் நீதிமன்றத்தில் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!





