புனித கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் கட்டணம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, மருத்துவ உதவி, காப்பீடு, நிதி உதவி மற்றும் யாத்ரீகர்களின் நலன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க அரசு பரிசீலித்துள்ளதா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது, இந்திய பக்தர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை எளிதாகவும், பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்வதற்கு மத்திய அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் ஆகிய இரு முக்கிய வழிகள் மூலம் இந்த யாத்திரை வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. பாதுகாப்புத் துறை, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகள் மற்றும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
உயர் மலைப்பகுதிகளில் பயணிக்கும் பக்தர்களுக்குக் கடுமையான மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவக் காலங்களில் பக்தர்களைத் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், லிபுலேக் கணவாய் வரை வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நீண்ட தூரம் நடப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் அரசு மூலம் முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. நேபாளம் வழியாகப் பயணிக்கும் பக்தர்களுக்குக் காட்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.





