“நான் சிஎம் ஆக வரல!” – மேடையில் அதிரடி கிளப்பிய கமல்ஹாசன்.. அரசியல்வாதிகள் கெட்டவங்கன்னா நீங்களும் தான் என சாடல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். முழுநேர அரசியலுக்கு அவர் வந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே ஆகியிருப்பார் என்று மேடையில் முன்வைக்கப்பட்ட கருத்திற்குப் பதிலளித்த அவர், தான் முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பதற்காக அரசியல் களத்திற்கு வரவில்லை என்பதை மிகத் தீர்க்கமாகப் பதிவு செய்துள்ளார். இந்த அதிரடி பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனது சினிமா வாழ்க்கையை உதாரணமாகக் காட்டிப் பேசிய கமல்ஹாசன், ஒரு துறையில் நுழையும் போதே ‘நான்தான் நட்சத்திரம்’ என்று கையைக்காட்டி வருபவன் யாராக இருந்தாலும் அவன் விவரம் தெரியாதவன் என்றுதான் பொருள் என்றார். அதற்கான தகுதியை மக்கள் தான் கொடுக்க வேண்டும் என்றும், மக்கள் அந்தப் பொறுப்பைத் தரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். அதுவரை கடந்த 45 வருடங்களாகத் தான் என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதைத் தனது மக்களுக்காகத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தார். தனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது தனது தந்தை, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தான் என்றும், அதனால் தான் தனக்கு அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல, அது மக்கள் சேவை என்றும் பெருமிதத்துடன் குறிப்பிடுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சட்டமன்றத்தில் புதிய வரலாறு!: "மாற்றம் ஒன்றுதான் மாறாதது!" தமிழக ஆளுநர் உரையில் முதலமைச்சர் விஜய்க்கு இமயமலை அளவு பாராட்டு!

மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் குறித்துப் பேசிய அவர், பொதுமக்கள் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்யாத வரை அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை என்றார். லஞ்சம் வாங்குபவனின் கை நீளமாக இருப்பதற்குக் கொடுக்கும் கைகள் இங்கே நீளுவதுதான் காரணம் என்று சாடினார். கல்லூரி வளாகத்தில் ஒரு தவறு நடந்தால் அதைத் தட்டி கேட்க வேண்டியது மாணவர்களின் கடமை என்றும், இனி நீங்கள்தான் இந்த நாட்டின் பெரியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ‘முழுநேர அரசியல்வாதி என்று எவனுமே இல்லை’ என்ற பெரியாரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அன்றாட உணவைப் போல அரசியலையும் தினசரி கவனிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றார். தனது கட்சியில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு கல்லூரியிலும் எதிர்காலத் தலைவர்களைத் தான் தேடி வருவதாகவும், இளைஞர்கள் கையில் தான் இந்த நாட்டின் உண்மையான எதிர்காலம் உள்ளது என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.