“திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து குஷ்பூ சுந்தர் கொந்தளிப்பு!

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா மற்றும் தமிழக முதல்வர் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் இரட்டை அர்த்தப் பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு நாகரிகமற்றது மற்றும் அருவருப்பானது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

தனது பதிவில் குறிப்பிட்டுள்ள குஷ்பூ சுந்தர், “உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சைக் கேட்டேன். அது மிகவும் மலிவானது, நாகரிகமற்றது மற்றும் ஆழமான இழிவுபடுத்தும் தன்மையைக் கொண்டது. அவர் மரபுவழியாகப் பெற விரும்பும் அரசியல் கலாச்சாரத்தையே இது பிரதிபலிக்கிறது. இதுபோன்ற மனநிலை கொண்டவர்கள் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தவோ அல்லது மாநிலத்தை ஆளவோ விரும்பினால், கடவுள்தான் இந்த மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பெண்களை ஏளனம் செய்வதையும், இழிவுபடுத்துவதையும் ஒரு அரசியல் நாடகமாக மாற்றி, ஆதரவாளர்களின் விசில் மற்றும் கைதட்டல்களில் மகிழ்பவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பெண்களின் கண்ணியத்தை அரசியலுக்குப் பலியாக்கினால், உங்கள் சொந்தக் குடும்பம் உட்பட எந்தக் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் பொதுப் பேச்சில் எல்லைக் கோடுகள் இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.