தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) தொழில் நுட்பக் கோளாறுகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தை நாடினார். வாக்குத் தணிக்கைச் சாதனங்களை (VVPAT) முழுமையாக எண்ணிச் சரிபார்க்க வேண்டும் என்றும், வி.எஸ்.பாபுவின் வெற்றியை ரத்து செய்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிபதி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் முடிவடைந்த 45 நாட்களுக்குள் உரிய சட்ட நடைமுறைகளின்படி தேர்தல் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 329(b)-ன் படி இந்த ரீட் மனு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பதையும் சுட்டிக்காட்டியது. சட்டப்பூர்வமான தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்யாமல் தொடரப்பட்ட இந்த மனு ஏற்புடையது அல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் தரப்பின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.





