கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, 74,202 வாக்குகள் பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தேர்தல் முடிவுகள் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த தோல்வியைத் தொடர்ந்து, கொளத்தூரின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டு, தற்போது சிந்தாதிரிப்பேட்டையில் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், சிசிடிவி கேமரா சின்னத்தில் போட்டியிட்டு 58 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் எம். பூர்ணிமா அவர்களின் தொழில்நுட்பப் பிரதிநிதியான டாக்டர் ஜி. மூர்த்தி, இவிஎம் மற்றும் விவிபேட் சரிபார்ப்பில் நடக்கும் அதிர்ச்சி தரும் குளறுபடிகளைச் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற ஆய்வின் போது, அதிகாரிகளால் திறக்கப்பட்ட விவிபேட் பெட்டிகளுக்குள் அச்சிடப்பட்ட ஸ்லிப்புகள் எதுவுமே இல்லை என அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கண்ட்ரோல் யூனிட்டில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், விவிபேட் பெட்டிக்குள் விழும் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் சரியாகப் பொருந்திப் பார்க்கப்பட்டால் மட்டுமே இந்தச் சரிபார்ப்பு முழுமையடையும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மற்றும் மாவட்ட அளவிலான துணைத் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் இது குறித்துத் தொடர்ந்து கேட்டும், “எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று கூறி விவிபேட் ஸ்லிப்புகளைக் காட்டாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதற்காக எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனுவை அளித்த பிறகும் ஸ்லிப்புகள் இதுவரை காண்பிக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் முற்றிலும் பழுதடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 5 இயந்திரங்களின் விவிபேட் ஸ்லிப்புகளையும் அதிகாரிகள் காட்ட மறுப்பதாகவும் அவர் கூறினார். மேலும், மாக்போல் நடத்துவதற்காக மைக்ரோ கண்ட்ரோலர் சிப்பில் உள்ள ‘பர்ன்ட் மெமரியை’ (Burnt Memory) அதிகாரிகள் அழிப்பது மிகப்பெரிய தவறான நடைமுறை என்றும் குற்றம் சாட்டினார்.
பர்ன்ட் மெமரியை அழிக்காமல் அப்படியே வைத்து மீண்டும் வாக்குப்பதிவு செய்து பார்த்தால் மட்டுமே, அந்த சிப்பில் உள்ள ‘சோர்ஸ் கோட்’ எவ்வாறு வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர் கூறினார். இவிஎம் வாக்குத் தரவுகளும் அச்சிடப்பட்ட விவிபேட் ஸ்லிப்புகளும் ஒப்பிட்டு மேட்ச் செய்யப்படும் வரை இந்தச் சரிபார்ப்பு செயல்முறை சட்டப்பூர்வமாகச் செல்லாது எனத் தெரிவித்து அவர் தனது பேட்டியை முடித்தார்.





