டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் இயங்கி வரும் பிரபலமான ‘ஃபதே கச்சோரி’ கடைக்குள் அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் சொகுசு கார் புகுந்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம் போல காலை மக்கள் கூட்டமாக கச்சோரி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் பாய்ந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்தியவர் நொய்டாவின் செக்டார் 79 பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பராக் மைனி என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த கார் கடையின் முன்பகுதியை முற்றிலுமாக சிதைத்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்துக்குள்ளான மெர்சிடிஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து டெல்லி போலீசார் தரப்பில்… காரை ஓட்டி வந்த வழக்கறிஞர் பராக் மைனி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல் (பிரிவு 279) மற்றும் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் (பிரிவு 337) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தின் போது வழக்கறிஞர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து அறிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
A speeding Mercedes-Benz SUV rammed into a famous ‘kachori’ shop in north Delhi’s Civil Lines area injuring six people, including some shop workers. pic.twitter.com/OB3sDf0laM
— Raajeev Chopra (@Raajeev_Chopra) April 2, 2024
சிவில் லைன்ஸ் பகுதியில் நடந்த இந்த விபத்து… அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இது போன்ற சொகுசு கார்களின் வேகம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. கடைக்குள் கார் புகுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் காரில் வேறு யாராவது இருந்தார்களா அல்லது வாகனத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெறுகிறது. டெல்லியில் இது போன்ற சொகுசு கார் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.





