தமிழக முதலமைச்சர் குறித்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்களுக்கு “திமுகவின் வளர்ப்பு சரியில்லை” என அமைச்சர் மரிய வில்சன் மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, முதலமைச்சர் குறித்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசிய தரக்குறைவான விமர்சனங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “திமுகவின் வளர்ப்பு சரியில்லை என்பதைத் தான் இதுபோன்ற பேச்சுகள் காட்டுகின்றன. திராவிட மாடல் என்பது அவர்களுக்கு இதைக் தான் கற்றுக்கொடுத்திருக்கிறது போலிருக்கிறது” என மிகக் காரசாரமாகக் விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், திமுகவைச் சேர்ந்த இரண்டு, மூன்று முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து பொதுவெளியிலும் மேடைகளிலும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். அரசியல் நாகரிகமற்றுப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திமுகவினருக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
முதலமைச்சரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் பொதுமக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுகவினர் விரக்தியின் உச்சத்தில் இதுபோன்ற நாகரிகமற்ற கருத்துக்களைப் பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.





