“கடல் அலை போல கொந்தளிக்கும் கிணறு!” – திடீர் விசித்திரம்: பூகம்பமா அல்லது அதிசயமா?

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பர்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயப் பண்ணையில் புதிதாக தோண்டப்பட்ட 18 அடி ஆழக் கிணற்றில், நீர் திடீரென கடல் அலை போலத் தொடர்ந்து கொந்தளித்து ஆடிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எந்தவித நிலநடுக்கமோ அல்லது வெளியாட்களின் குறுக்கீடோ இல்லாத நிலையில், கிணற்று நீர் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் போல அலை அலையாகக் குலுங்குவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவின.

இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது ஏதேனும் நில அதிர்வின் அறிகுறியா அல்லது ஆன்மீக விசித்திரமா என்று அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர். மேலும், அந்தப் பகுதியிலுள்ள மற்ற கிணறுகளில் நீர் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாக இருந்த நிலையில், இந்த ஒரு குறிப்பிட்ட கிணற்றில் மட்டும் நீர் தொடர்ந்து அலைமோதியது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மோர்பி மாவட்ட நிலவியல் வல்லுநர்கள் மற்றும் காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி மைய (ISR) விஞ்ஞானிகள் கிணற்றையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் விரிவாக ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இந்தியாவிற்கு தனி ரூல்புக் இருக்கு!" - போலந்து பெண் பகிர்ந்த 15 சுவாரசிய விஷயங்கள் வைரல்!

ஆய்வின் முடிவில், இப்பகுதியில் எவ்வித நிலநடுக்கமும் அல்லது பூகம்பப் பிளவுகளும் ஏற்படவில்லை என்பதை ஆய்வாளர்கள் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கான உண்மையான அறிவியல் காரணத்தையும் நிலவியல் வல்லுநர்கள் விளக்கமாக வெளியிட்டுள்ளனர். மழைக்காலத்தில் நிலத்தடி நீர்நிலைகள் வேகமாக நிரம்பும்போது, பாறை இடுக்குகளிலும் மண் அடுக்குகளிலும் பெருமளவிலான காற்று சிக்கிக் கொள்கிறது. இந்தச் சிக்கியக் காற்று அதிக அழுத்தத்தின் காரணமாக நிலத்தடி நீரைக் மேல்நோக்கித் தள்ளும்போது, அது புதிதாக வெட்டப்பட்ட கிணற்றின் அடிப் பகுதி வழியாக வெளியேற முயல்கிறது.

அவ்வாறு அதிக அழுத்தத்துடன் காற்று வெளியேறும்போது, கிணற்றின் குறிப்பிட்ட வடிவம் மற்றும் ஆழத்தின் காரணமாக ‘ரெசோனன்ஸ்’ (Resonance) எனப்படும் அதிர்வுப் பண்பு உருவகி, நீர் தொடர்ந்து அலை போல ஆடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கெட்டில் உள்ள தண்ணீரை வேகமாக ஆட்டினால் நீர் எவ்வாறு இருபுறமும் அலைமோதி வழியுமோ, அதே போன்ற இயற்பியல் நிகழ்வே (Well Seiche Effect) இங்கும் நடந்துள்ளது. நிலத்தடி காற்றழுத்தம் படிப்படியாகக் குறையும்போது கிணற்று நீர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்றும், பொதுமக்கள் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.