“இந்தியாவிற்கு தனி ரூல்புக் இருக்கு!” – போலந்து பெண் பகிர்ந்த 15 சுவாரசிய விஷயங்கள் வைரல்!

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இங்குள்ள கலாச்சாரம், மனிதர்கள் மற்றும் வாழ்க்கை முறையைக் கண்டு வியந்து தங்களது அனுபவங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவில் வசித்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா பட்டாலாஸ்-கல்ரா என்ற இன்ஸ்டாகிராம் கிரியேட்டர், பிற நாடுகளில் செய்ய மாட்டேன், ஆனால் இந்தியாவில் மட்டுமே மகிழ்ச்சியாகச் செய்வேன் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.

தாம் தயாரித்த வீடியோவில், இந்தியாவில் தான் பழகிக்கொண்ட 15 அன்றாடப் பழக்கங்களையும் அவர் முழுமையாகப் பட்டியலிட்டுள்ளார். முதலாவதாக, சுகாதாரத்தைப் பார்க்க முடியாத தெருவோரக் கடைகளில் இந்தியாவில் கவலையின்றி சாப்பிடுவேன், ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் உணவுப் பாதுகாப்பு நிபுணராக மாறிவிடுவேன் எனக் கூறும் அவர், இரண்டாவதாக அறிமுகமாகி 12 விநாடிகளே ஆன ஆட்டோ ஓட்டுநரை நம்பி பயணிப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்கிறார். மூன்றாவதாக பாதசாரிகள் கோடுகளைப் பார்க்காமல் பரபரப்பான போக்குவரத்திற்கு நடுவே சாலையைக் கடப்பது, நான்காவதாக பிளாஸ்டிக் கப்பில் தரும் தெருவோர டீயை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அனுபவம்போல குடிப்பது, ஐந்தாவதாக கூகுள் மேப்ஸை விட தெரியாத அங்கிளின் வழிகாட்டுதலை நம்புவது, ஆறாவதாக “உள்ளே வாருங்கள்” என அழைத்ததும் யோசிக்காமல் வீட்டிற்குள் செல்வது எனத் தனது அனுபவங்களைத் தொடர்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Dominika Patalas-Kalra (@domipatalas)

ஏழாவதாக, எடையையோ திருமணத்தையோ பற்றி விமர்சிக்கும் பக்கத்து வீட்டு ஆன்டிகளின் பேச்சைக் கேட்டுச் சிரிப்பது, எட்டாவதாக காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டு காரமே இல்லை எனச் சொல்வது, ஒன்பதாவதாக பஸ் அல்லது ஆட்டோவில் நெரிசலில் இடமில்லாமல் பயணிப்பது, பத்தாவதாக நள்ளிரவில் இரவு உணவு சாப்பிடுவது, பதினொன்றாவதாக யாரென்றே தெரியாத திருமணத்தில் குடும்ப உறுப்பினர்போலக் கலந்துகொள்வது, பன்னிரண்டாவதாக பக்கத்து வீட்டு சாப்பாட்டை மறுக்காமல் வாங்கிச் சாப்பிடுவது எனப் பட்டியலிடுகிறார். இறுதியாக, அந்நியர்களை பையா, அங்கிள், ஆன்டி எனக் கூப்பிடுவது, தெருவோரக் கடை பிளாஸ்டிக் நாற்காலியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவது மற்றும் வீட்டில் இருந்துகொண்டே “இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடுவேன்” எனப் பொய் சொல்வது வரை 15 விஷயங்களையும் சுட்டிக்காட்டி, இந்தியாவிற்கு எனத் தனி விதிகளும் ரூல்பேக்கும் உண்டு என முடித்துள்ளார். இந்த வீடியோவைக் கண்ட இந்திய நெட்டிசன்கள், இந்தியாவின் அன்பையும் கலாச்சாரத்தையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டதாகப் பாராட்டி வருகின்றனர்.